tamilnadu

img

தள்ளாட்டத்தில் குறுந்தொழில் - ஏ.எஸ்.கண்ணன்

மத்திய நிதி அமைச்சர் கொரோனாவில் பாதிப்புக்குள்ளான மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றிட 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை முன் வைத்தார். 

துறை வாரியாக பணத்தை பிரித்து செலவு செய்திடும் திட்டத்தையும் அறிவித்துள்ளார். அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட ரூ.3 லட்சம் கோடி சலுகை என்ற அறிவிப்பும் உள்ளது.  பிணையில்லா கடனை நான்கு ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவது, இதில் முதல் ஆண்டு கடனை செலுத்தத் தேவையில்லை என்பதும் அடக்கம்.  வரவேற்க வேண்டிய அம்சம் இது.  இது ஏற்கனவே வங்கிக் கடன்கள் பெறுவதில் உள்ள நடைமுறைதான்.

22 லட்சம் நிறுவனங்கள்

மாநிலத்தில் பதிவு பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ) தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 22 லட்சத்திற்கு மேல் உள்ளது.  பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 1.20 கோடிக்குமேல் நாடு முழுவதிலும் பதிவுபெற்ற எம்.எஸ்.எம்.இ. என்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 45 லட்சம் யூனிட் என்று மத்திய அரசு கூறுகிறது.  ஆனால் உண்மையில் இது 2.5 கோடிக்கு மேல் இருக்கும். எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் எத்தனை உள்ளன என்பது குறித்து அரசிடம் சரியான கணக்கில்லை.  இந்த நிறுவனங்களில் மொத்தம் 15 கோடிக்கும் மேல் தொழிலாளர்கள் உள்ளனர்.  இதில் தமிழகத்தில் மட்டும் 45 விழுக்காடு நிறுவனங்கள் இயங்குகின்றன.

விவசாயத்திற்கு அடுத்து வேலை வாய்ப்பை வழங்கு வது எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களே. நாட்டின் முன்னேற்றத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் வேலை வாய்ப்பிற்கும் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனங்களில் நாடு முழுவதிலும் 15 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் பணியில் இருக்கின்றனர்.

குறுந்தொழில் துறையின் முக்கியத்துவம்

பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் குறுந்தொழில் 85%, வேலைவாய்ப்பு 64%, உற்பத்தி 55%, அந்நிய செலாவணி ஈட்டுவதில் 40 விழுக்காடு என மத்திய அரசே புள்ளி விவரங்களைத் தருகின்றது.

மேற்கண்ட பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு தன் பங்கினையாற்றிடும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பெரும் உதவிகள் எதையும் வழங்கிடுவதில்லை.  அதிகபட்சமாக குறுந்தொழில் முனைவோர் 20 சதவீத உதவிகளை பெறுபவர்களாக உள்ளனர் என்று வேண்டுமானால் கூறலாம்.

சுயம்பு போல் குறுந்தொழில் முனைவோர் (மைக்ரோ செக்டார்) தேசத்தின் தொழில் வளர்ச்சிக்கு பாடுபட்டா லும் பலன் ஏதுமில்லை.  தொழில்துறையில் வளர்ச்சி யற்றவர்களாகவே உள்ளார்கள்.  காரணம் மத்திய மாநில அரசுகள் எந்தவிதமான  உதவிகளும் செய்வது இல்லை.  டாக்ட் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை மத்திய அரசு தொழில் நிறுவனங்களில் ஜாப் ஆர்டர் தர வேண்டும் என்பது. இதை ஒப்புக் கொண்ட முந்தைய மத்திய அரசு 20% ஜாப் ஆர்டர் தர சிறப்பு ஆணை பிறப்பித்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 4.4 சதவீதம் தரவும் ஆணை பிறப்பித்தது. மோடி ஆட்சி பொறுப்பேற்றபின் தில்லியில் துணை ஜனாதிபதி தலைமையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.  டாக்ட் சங்கங்கள் சார்பில் நானும் கலந்து கொண்டேன். அழைப்பும் வந்தது. ஆனாலும், இதுவரை பொதுத்துறை நிறுவன ஜாப் ஆர்டர் ஆணையால் குறுந்தொழில் துறைக்கோ எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கோ எந்த பயனுமில்லை.

மத்திய அரசு நிறுவனங்களில் ஜாப் ஆர்டர் வேண்டுமெனக் கோரி டாக்ட் சங்கம் சென்னையில் (பொது மருத்துவமனை அருகில்) போராட்டம் நடத்திய போது அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், டி.ராஜா கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்கள். 

அரசு ஏற்றிய பெரும் சுமைகள்

இந்நிலையில், 2019 ஜூன் மாதத்திலிருந்து மத்திய அரசு எடுத்த பல நடவடிக்கைகளின் விளைவாக மூலப் பொருள் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை ஏறியது, பணமதிப்பு நீக்கம் போன்ற செயல்களால் கடும் பாதிப்புக்குள்ளாகியது சிறு, குறு தொழில்கள்தான். மேற்கண்ட துறைகள் மீது  ஜி.எஸ்.டி. போன்றவை பெரும் சுமையாக அழுத்தியுள்ளன. குறு தொழில் நிறுவனம் (மைக்ரோ செக்டார்) என்றால் 85 விழுக்காடு ஜாப் ஆர்டர் (உதிரி பாகங்கள்) செய்யும் துறை என்பது தான் உண்மை.  ஜாப் ஆர்டர் செய்யும் போது கிடைக்கும் நிகர லாபம் 10 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் தான்.  ஆனால் மத்திய அரசு விதித்துள்ள 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரியை குறுதொழில் நிறுவனங்கள் கட்டுவது எப்படி சாத்தியம்?

தொழிலாளர்களுக்கு ஊதியம், வாடகை, மின்கட்டணம், வாங்கிய கடனுக்கு வட்டி, அசல், இதர செலவுகள் என்றநிலையில் எப்படி குறுதொழில்கள் ஜிஎஸ்டி வரி கட்டி இயங்க முடியும்?

தொடர்ந்து மத்திய அரசிடம் இந்நிலைமைகளை விளக்கி பல கோரிக்கைகளை முன்வைத்தும், இதுவரை எந்த முன்னேற்றமுமில்லை. மாறாக கெடுபிடி வரி வசூல் நெருக்கடியால் நாடு முழுவதிலும் பல லட்சம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் மூடப்பட்டு அதில் பணி புரியும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

குறுந்தொழில் முனைவோர்தொழில் முதலீடு ரூ.1 லட்சம் முதல் 20 லட்சம் வரை செய்திருப்பவர்கள் 65 சதவீதம் வரை உள்ளனர்.  பணிபுரியும் தொழிலாளர்கள் 75 சதவீதத்திற்கு மேல் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆவார்கள்.  தற்போதைய நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம், வாடகை, மின் கட்டணம், இதர தேவைகளுக்காக கொடுக்க வேண்டிய பாக்கிகள் நிலுவை உள்ளது.  கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் ஒட்டுமொத்தமாக குறுந்தொழில்துறை சீரழிந்துவிட்டது.

ரூ.3லட்சம் கோடி யாருக்கு?

இச்சூழலில் மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா பேக்கேஜ் ரூ.20 லட்சம் கோடியில் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் சீர்குலைவை சரிசெய்ய ஒதுக்கிய ரூ.3 லட்சம் கோடி என்பதில் உதவியோ, மானியமோ ஏதுமில்லை. கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள குறுந்தொழில் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, வங்கிகள் குறுந் தொழில் துறையினரை அலட்சியம் செய்வது பிரதமர், நிதியமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா?  ஜூன் 5ஆம் தேதி வரை சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கு ரூ.8,320 கோடி கடன் தரப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிக்கை விடுகிறார்.  இதில் குறுந்தொழில் முனைவோருக்கு எவ்வளவு கடன்  வழங்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து பாருங்கள், உண்மை தெரியும்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கொரோனா பாதிப்பிலிருந்து தொழில்துறையை அதிலும் சிறு, குறுந் தொழில்களை பாதுகாத்திட 100%, 85%, 75%, 50% என போதிய நிதியும், கடன் வசதியும் அறிவித்துள்ளன.  

இந்திய அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் கோடி என்பதை வங்கிகள் மூலம் வங்கிகளின் பணத்தை 12% வட்டியுடன் எம்.எஸ்.எம்.இ. தொழில் நடத்த கடனாக தருகிறது.  3 லட்சம் கோடியில் உதவியோ, வட்டி தள்ளுபடியோ, தொழிலாளர்களுக்கு சம்பளமோ, மின் கட்டணக் குறைப்போ - எந்த அம்சமும் இல்லை.

எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு முதலீட்டுக் கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதில் வங்கிகளிடம் பெற்ற கடனுக்காக வட்டியும், அசலும் செலுத்தாத எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு வராக்கடனான அசலையும் வட்டியையும் ஒன்றாக இணைத்து கடன் கொடுத்தது போல் இணைத்திட வழி செய்துள்ளது நடுவண் அரசு.

ரூ.3 லட்சம் கோடியை 24 லட்சம் யூனிட்டுகளுக்கு பிரித்தால் ரூ.5 லட்சம் வரை ஒவ்வொரு நிறுவனமும் பிணை யில்லாக் கடனை பெற முடியும்.  அதிலும் இனி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருமானம்  100 கோடியிலிருந்து 250 கோடி என வரையறுக்கப்பட்டுள் ளது.  இதில் குறுந்தொழில் துறைக்கு என்ன பயன்? 

இதன் விளைவாக எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் வரையறைக்குள் இனி பெரு முதலாளிய கார்ப்பரேட் நிறுவனங்களும் பங்குவகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு மூலதன, நடுத்தர மூலதன தொழில் துறையினரை தொழில் போட்டா போட்டியில் நசுக்கிடும் நிலை ஏற்படும்.

அரசு அறிவிக்கும் 200 கோடி டெண்டர் பணிகளில் அயல்நாட்டு நிதிநிறுவனங்கள் இனி பங்கு பெற முடியாது என்ற சட்டத் திருத்தம் காரணமாக இனி எம்.எஸ்.எம்.இ. வரம்புக்குள் வரும் பெரும் நிறுவனங்களால் மட்டுமே டெண்டர்களில் பங்கு பெற இயலும்.  மேற்கண்ட டெண்டரில் குறுந்தொழில் துறையினர் பங்குபெற இயலாது. இதன் மூலம் அரசு அறிவித்துள்ள பிணையில்லாக் கடன் திட்டம் மூலம் பெரிய நிறுவனங்களே பலன் பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் ஜாப் ஆர்டர் செய்த வகையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தரவேண்டிய நிலுவை பாக்கி ரூ.5 லட்சம் கோடியை தருவதற்கான எந்த முயற்சியும் இதுவரை கிடையாது.  மாநிலங்களுக்கு தராதது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 

மேலும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கெதிரான திவால் நடவடிக்கை சட்டங்களில் திருத்தம் என்பது 1 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாய் என்ற அறிவிப்பு தவிர, கடன் வட்டியிலிருந்து எந்த தள்ளுபடியோ, சலுகையோ இல்லை என்பது வேதனையானது.

தொழில்நுட்ப உதவிகளிலும் ஏமாற்றமே!

அதோடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில், கச்சாப்பொருள், சந்தை ஏற்றுமதி உள்ளிட்ட நுட்பங்களை அறிந்திட, வளப்படுத்திட சம்பியன் என்ற தொழில் நுட்ப தளத்தை மத்திய அரசு துவக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதிலும் உள்நாடு தவிர மருத்துவ உபகரணங்களுக்கான தேவையையும், கொரோனா தடுப்பு முகக்கவசம், உடை உள்ளிட்டவைகளை தயாரித்திட மூலப்பொருள், சந்தை விநியோகம் பற்றி இத்தளம் வழிகாட்டுமாம். இந்த தொழில்நுட்ப தளத்தை கொரோனா ஸ்பெஷல் தளம் என்று வேண்டுமானால் அளவிடலாமே தவிர நிரந்தரமாக வழிகாட்டுவதற்காக இத்தொழில் நுட்பதளத்தில் சொல்வதற்கு ஏதுமில்லை. இந்த தொழில் நுட்பதளத்தால் ஏற்கனவே பாரம்பரியமாக சிறு, குறுந்தொழில் துறை, தங்களின் அனுபவத் தொழில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் செழுமைப்படுத்திட, சந்தை திறந்திட அறிவிப்பில்லை என்பது பெரும் ஏமாற்றமே.

4 ஆயிரம் கோடியில் எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டிற்கும், தொழிலில் ஏற்படும் நெருக்கடியை தீர்க்கவும் தனி நிதியம் அமைத்திடவும் நடுவண் அரசு முடிவெடுத்துள்ளது.

வராக்கடன் வைத்துள்ள சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியம் மூலம் கடன் தரப்படும் என்ற அறிவிப்பு எம்.எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களில் நலிந்த குறுந்தொழில் நிறுவனங்களைக் கரையேற்று வதாக இருக்க வேண்டும். அதேபோல் எம்.எஸ்.எம்.இ. நிறு வனங்களுக்கு முதலீட்டுக்கடன் ரூ.50 ஆயிரம் கோடியில் மிகச்சிறிய நிறுவனங்களை பெருக்கிட இக்கடனை பிரித்துக் கொடுப்பது சிறு, குறுந்தொழில் முனைவோரை பாதுகாக்க உதவிடும்.

தமிழக முதல்வர் கவனிப்பாரா?

அதேபோல தமிழக முதல்வர் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுக்க மேம்படுத்த ரூ.300 கோடி அறிவித்துள்ளது. இதில் குறுந்தொழிலுக்கு எந்த பயனும் இல்லை. எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு வங்கி கடனுக்கான வட்டி 12 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதன்மூலம் பெருஞ்சுமை குறைய வாய்ப்புள்ளது.

மத்திய அரசு நியமித்த நாயக் அபித் ஊசேன் கமிட்டியிலிருந்து கடைசியாக நியமித்த சக்ரவர்த்தி கமிட்டி வரை குறுந்தொழில் நிறுவனங்கள் வருட உற்பத்தியில் 20சதவீதம் நடைமுறை மூலதனம் வழங்க சிபாரிசை பல வங்கிகள் அமல்படுத்துகிறது.  நெருக்கடியான இன்றைய காலகட்டத்தில் மேலும் 25சதவீதம் சேர்த்து அடாக் தொகை வட்டி இல்லா நடைமுறை மூலதனம் வழங்க வேண்டும்.  கொரோனா நிலைமை சரியாகும் வரை தவணை பிடித்த மில்லாது கடன் ரூ.2 லட்சம் குறைந்த 7சதவீதம் வட்டியில் தரவேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், சிறு குறுந்தொழில் துறையினர்க்கான வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் எடுக்கின்ற நடவடிக்கைகளையும் உண்மை நிலையை யும் சுட்டிக் காட்டியுள்ளோம்.  பாரம்பரியமாக உற்பத்தி, வேலைவாய்ப்பு, பொருளாதார உயர்விற்கு உறுதுணை யாக உள்ள மேற்கண்ட குறுந்தொழில் துறையை அழிவிலிருந்து பாதுகாப்பது மத்திய,மாநில அரசுகளின் கடமையாகும்.

கட்டுரையாளர் : முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், 
தலைவர், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்)






 

;